கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன் என்பவர் காரில் வந்த மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த கொடூரச் செயலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உடல் எரியும் நிலையில் அந்த முதியவர் சாலையில் ஓடிய காட்சி, திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்குலைந்துள்ளது என்பதற்கு ஒரு பயங்கர சாட்சி என்று சாடியுள்ளார். “இன்னும் என்ன கொடுமை நடக்குமோ?” என்ற அச்சத்திலேயே மக்கள் வாழ வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டுமல்ல, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கும்தான் எனத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கை இதைவிட மோசமாகக் கொண்டு செல்ல முடியாது என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தரச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் திமுக அரசுக்குக் கடும் கண்டனங்களுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
