ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கோவிந்த்பூர் பகுதியில் மனதை உலுக்கும் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாஸ்து விஹார் காலனியில் வசித்து வந்த லிபிகா குமாரி என்ற பெண் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு, ஐந்து நாட்களாக உடல் வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்தது.
மேலும் தனது சகோதரியின் இறுதிச் சடங்கிற்கு உதவுமாறு அவரது சகோதரர் பிரணவ் ராஜவர்தன் அக்கம் பக்கத்தினரிடம் கோரியும், யாரும் உதவ முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சகோதரர், ஏப்ரல் 12 அன்று வீட்டின் கழிவறையிலேயே துணிகள் மற்றும் தலையணைகளை வைத்து லிபிகாவின் உடலை எரிக்க முயன்றுள்ளார்.
இதனால் வீட்டிலிருந்து கிளம்பிய துர்நாற்றம் மற்றும் புகையினால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவிந்த்பூர் காவல்துறையினர், பாதி எரிந்த நிலையில் இருந்த லிபிகாவின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த உயிரிழந்த லிபிகாவின் தந்தை ஒரு முன்னாள் விஞ்ஞானி என்பதும், 2023-ல் அவர் மறைந்த பிறகு அந்த குடும்பமே கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
