நேபாள பிரதமர் பாலேந்திர ஷா மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களது சொத்து விவரங்களை வெளியிட்டது அந்நாட்டில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிரான பிம்பத்துடன் ஆட்சிக்கு வந்த பாலேந்திர ஷா, பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளேயே வெளிப்படைத்தன்மையுடன் தனது சொத்துகளை அறிவித்தார்.
இருப்பினும், அவர் அறிவித்துள்ள சொத்துகளின் மதிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரிடம் 14.6 மில்லியன் ரூபாய் ரொக்கம் மற்றும் 190 சவரன் பூர்வீகத் தங்கம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிதி அமைச்சர் ஸ்வர்ணிம் வாக்லே மற்றும் உள்துறை அமைச்சர் சுதன் குருங் ஆகியோரும் பல கோடி மதிப்பிலான பங்குகள் மற்றும் நிலங்களைச் சொத்துகளாகக் கொண்டுள்ளனர்.
இந்தச் சொத்து விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, நேபாளத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள் மற்றும் பிரதமர் இவ்வளவு பெரிய சொத்துகளை எவ்வாறு ஈட்டினார்கள் என்பது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் வருமானம் வருவதாக பிரதமர் ஷா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக, விஐபி சலுகைகளைத் தவிர்த்து எளிய மனிதராகத் தன்னைக் காட்டிக்கொண்ட பாலேந்திர ஷா மீதான இந்தச் சொத்து விவகாரம், அவரது அரசியல் நற்பெயருக்கு ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது.
