அண்மையில் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்த ‘துரந்தர்’ திரைப்படத்தில் நடித்த நடிகர் நதீம் கான், பாலியல் வன்கொடுமை புகாரின் கீழ் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய இப்படத்தில் நதீம் கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தன்னிடம் வீட்டு வேலை செய்த 41 வயது பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, 2015-ஆம் ஆண்டு முதல் நதீம் கானிடம் அவர் வேலை செய்து வந்துள்ளார்.

அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த பத்து ஆண்டுகளாக நதீம் கான் அவரைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இறுதியில் திருமணம் செய்ய நதீம் கான் மறுத்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், கடந்த ஜனவரி 22-ஆம் தேதி நதீம் கானை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.