உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், திருமணமான சில நாட்களிலேயே புதுப்பெண் ஒருவர் தனது கணவரால் கடுமையான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 27 வயது பெண்ணிற்கு கடந்த ஏப்ரல் 30, 2026 அன்று திருமணம் நடைபெற்றது.
ஆனால், திருமணம் முடிந்த அடுத்த நாள் முதலே அவரது கணவர் அவரிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, அடித்துத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, மே 4ஆம் தேதி அவர்கள் சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிக்கு தேனிலவு சென்றுள்ளனர். அங்கும் அந்த நபரின் கொடூரமான நடத்தை மாறவில்லை.
மேலும் கடந்த மே 9ஆம் தேதி தேனிலவு சென்ற இடத்தில் தங்கியிருந்த ஹோட்டலில் வைத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கணவர், அந்தப் பெண்ணை ஹோட்டல் படிக்கட்டுகளில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இதில் பெண்ணின் தலை, முதுகு மற்றும் இரண்டு முட்டிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவரைக் கொலை செய்துவிடுவதாகவும் கணவர் மிரட்டியுள்ளார். நொய்டா திரும்பியதும் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப் போவதாகக் கூறிய பெண்ணை மீண்டும் தாக்கிவிட்டு அவர் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
இதனால் தற்போது பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைகளை முடித்துவிட்டு, நொய்டாவின் செக்டர்-113 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
