அதிமுக-வைக் காட்டிக் கொடுத்துவிட்டு, தங்களது சுயநலத்திற்காக ஆளும் கட்சியை நாடி ஓடும் ஒரு கூட்டம், ‘கோயபல்ஸ்’ பாணியில் பொய்களை விதைத்து வருவதாக அதிமுக சட்டமன்றக் குழு கொறடாவும் முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கடுமையாகச் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழக அரசியல் வானில் தற்போது பல கோயபல்ஸ்கள் வட்டமிட்டு வருவதாகவும், அவர்கள் இதுவரை தங்களது இயக்கத்தைச் சார்ந்திருந்தவர்கள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கழகத்திற்குச் சோதனை ஏற்படும்போதெல்லாம், இனி அதிமுக-விற்கு எதிர்காலமே இல்லை என்று தாங்களாகவே முடிவெடுத்துவிட்டு, சிலர் ஆளுங்கட்சியில் அடைக்கலம் தேடி ஓடுவதாக அவர் விமர்சித்துள்ளார். அவ்வாறு சென்ற இடத்தில் தங்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காக, திமுக-வோடு சேர்ந்து ஆட்சி அமைக்க எடப்பாடி கே. பழனிசாமி முயன்றதாக இந்த அவதூறு பரப்புவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, 47 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றுகூடி எடப்பாடி பழனிசாமியை ஒருமனதாக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், கொறடா உத்தரவை மீறி மைனாரிட்டி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 பேர், தற்போது மனசாட்சிக்கு விரோதமாகப் பழி சுமத்துவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். தங்களை தூற்றுவதால் அவர்களுக்கு ஒரு வாழ்வு கிடைக்கிறது என்றால், பேரறிஞர் அண்ணாவின் ‘வாழ்க வசவாளர்கள்’ என்ற சொற்களையே அவர்களுக்குக் காணிக்கையாக்குவதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
