இன்று நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில்  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அவர் பேசியதாவது “திமுகவும் அதிமுகவும் இணைந்து, பாஜகவின் ஆதரவோடு தமிழ்நாட்டில் ஒரு மோசமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால், மு.க.ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே, ஒட்டுமொத்த அதிமுகவின் உண்மையான விசுவாசிகளையும், தொண்டர்களையும் தவெக-விற்குள் கொண்டு வர வேண்டும் என எங்கள் தலைவர் விஜய் ஒரு மாபெரும் அரசியல் வியூகத்தை வகுத்துள்ளார்.

அதன் விளைவாகவே, தற்போது 90 சதவீத அதிமுக நிர்வாகிகள் தவெக-வை நோக்கி படையெடுத்து வருகின்றனர். எம்.ஜி.ஆரால் பெயர் சூட்டப்பட்ட மரகதம் குமரவேல், திமுகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க முயன்றதை எதிர்த்துதான் தனது எம்.எல்.ஏ பதவியையே தைரியமாக ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய்யை மக்கள் மத்தியில் செல்லவிடாமல் தடுக்க திமுக பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்தது. கரூரில் காவல்துறையைத் தவறாகப் பயன்படுத்தி, திட்டமிட்டே ஒரு செயற்கையான கூட்ட நெரிசல் விபத்தை ஏற்படுத்த திமுக முயன்றது. கரூர் மக்களின் கண்ணீரின் பாவம் தான் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோற்றுப்போகக் காரணம். கருணாநிதி குடும்பத்தின் கடைசி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் தான் இருப்பார்; இனி அவரது குடும்பம் லண்டனுக்குச் சென்று செட்டில் ஆக வேண்டியதுதான். ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கரூரை மீட்க தவெக-விடம் ஒரு தனி கணக்கு உள்ளது, அதை முடிக்காமல் விடமாட்டோம்.

அதுமட்டுமன்றி, தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க ரூ.50 கோடி வரை பேரம் பேசியுள்ளனர். எதற்கும் தவெக பயப்படாது; மீண்டும் தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் தவெக-வே வெல்லும். சினிமா துறையைப் பொறுத்தவரை, இனி ரெட் ஜெயண்ட் மூவீஸ் நினைத்தாலும் படங்களை ரிலீஸ் செய்ய முடியாது. தியேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியாது; காரணம் இனி கருப்புப் பணம் கிடையாது. எந்தத் தொழில் செய்பவரும் தமிழ்நாட்டில் நிம்மதியாகத் தொழில் செய்ய வேண்டும் என்பதே தவெக-வின் முதன்மை குறிக்கோள் என்றார்.