தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு, தமிழக முதல்-அமைச்சராக அரியணை ஏறியுள்ளார் விஜய். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜசேகரன், கட்சித் தலைமை மீது ஏற்பட்ட கடும் அதிருப்தி காரணமாக இன்று தவெக-வில் இணைந்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் விஜய்யிடம் தோல்வியடைந்த போதிலும், தொடர்ந்து அதிமுகவின் முக்கியப் பொறுப்பில் நீடித்து வந்த ராஜசேகரன், திடீரென தவெக-வில் ஐக்கியமாகியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக-வில் இணைவதற்கு முன்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ராஜசேகரன் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக பொருளாளர் பதவி வழங்கியமைக்கும், 2026 சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்ததற்கும் மனமார்ந்த நன்றிகள். என்னுடைய அரசியல் கொள்கை சார்ந்த நிலைப்பாடுகள், மக்கள் நலன் குறித்த எனது பார்வை மற்றும் எதிர்கால பொது வாழ்க்கை பயணத்தை முன்னிறுத்தி, இந்த முடிவை எடுத்துள்ளேன்.
திருச்சி பொருளாளர் பொறுப்பு உள்ளிட்ட கட்சியின் அனைத்து அடிப்படைப் பொறுப்புகளில் இருந்தும் கனத்த இதயத்துடனும், கலங்கிய மனதுடனும் விலகுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
