சேலம் மாவட்டத்தில், ஏற்கனவே திருமணமான பெண்ணை மறைத்து இரண்டாவது முறையாக திருமணம் செய்து வைத்த மோசடி சம்பவம் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக, பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு, மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேட்டூர் அருகே திண்டமங்கலத்தானூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன், கருப்பட்டி வியாபாரியாக தொழில் செய்து வருகிறார். அவரது மகன் பிரகாஷ் (37), குடும்ப வியாபாரத்தில் சேர்ந்து செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக திருமண முயற்சிகளில் இருந்த பிரகாஷுக்காக, ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் என்பவர் மூலம் மணமகள் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பின்னர், சங்ககிரியைச் சேர்ந்த மணி என்ற புரோக்கர் அறிமுகப்படுத்தப்பட்டார். இவர், ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள பிரியதர்ஷினி (27) என்ற பெண்ணை, திருமண பொருத்தமான பெண் எனக் காட்டினார். முருகன் கோவிலில் பெண் காண்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, வள்ளி, செல்வி மற்றும் பிரியா ஆகிய பெண்கள் முறையே புரோக்கர், தாயாகவும், சகோதரியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
திருமணம் கடந்த மாதம் 27-ஆம் தேதி ஜலகண்டாபுரம் அருகே உள்ள கோவிலில் நடைபெற்றது. அதற்காக ரூ.1.8 லட்சம் ‘கமிஷன்’ புரோக்கர்களுக்கு வழங்கப்பட்டது.
திருமணத்திற்கு பின்னர், மணப்பெண் முதலிரவுக்கு மறுப்பு தெரிவித்து வந்தார். இது சந்தேகம் எழச் செய்ததால், விசாரணை நடத்திய குடும்பத்தினர், அதிர்ச்சிகரமான தகவலை அறிந்தனர். பிரியதர்ஷினிக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருக்கிறது. மேலும், ஒரு பெண் குழந்தையும் இருப்பதாகவும், தற்போதைய திருமணம் கட்டாயம் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து அர்ஜுனன், ஜலகண்டாபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பணக்கார வாலிபரை இலக்காக வைத்து, ஏற்கனவே திருமணமான பெண்ணை மீண்டும் திருமணம் செய்து வைக்கும் மோசடி வலையமைப்பே இயங்கி வந்தது என்பது தெரிந்தது.
இதனையடுத்து, பிரியதர்ஷினி, செல்வி மற்றும் பிரியா ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். புரோக்கர் மணி, அவரது நண்பர்கள் குமார், சக்திவேல் மற்றும் வள்ளி ஆகிய நால்வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டால், இதே போன்று மற்ற நபர்களுக்கும் நடந்ததா? என்பது பற்றிய தகவல்கள் வெளிவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
