கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுவம்பட்டு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன்(35) என்ற மகன் உள்ளார். கடந்த நவம்பர் மாதம் சிலம்பரசனுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ரோஜா(25) என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் கடந்த மே மாதம் நான்காம் தேதி நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட ரோஜாவை சிலம்பரசன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ரோஜாவை பரிசோதனை செய்ததில் அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் சிலம்பரசன் குழப்பத்தில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சிலம்பரசன் பிளேடால் தனது மனைவியின் கழுத்தில் வெட்டி கொடூரமாக கொலை செய்தார்.

பின்னர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிலம்பரசன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எனக்கும் ரோஜாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. நான் ரோஜா வீட்டிற்கு சென்று வந்த போது இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தோம்.

கடந்த மே மாதம் எங்களுக்கு திருமணம் முடிந்தது. இதனை தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது அவர் 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அவரது கர்ப்பத்திற்கு வேறு யாராவது காரணமா? என சந்தேகம் ஏற்பட்டு மனதுக்குள் குழப்பமாகவே இருந்தது. நேற்று முன்தினம் எனக்கும் ரோஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது பிளேடால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என கூறினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.