மகாராஷ்டிராவைச் சேர்ந்த 30-வயதான ஒரு பெண், தனது கணவனை விவாகரத்து செய்து விட்டதாகக் கூறி, மாதம் ₹1 கோடி ஜீவனாம்சம், மும்பையில் வீடு, மேலும் ₹12 கோடி ரூபாய் நிதியுதவி, BMW கார் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்க உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவருடைய மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு செவ்வாயன்று விசாரித்தது. இந்த மனு மற்றும் கோரிக்கைகள் நீதிபதிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மனுவில், அந்தப் பெண் தனியாகவே நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கறிஞரின் உதவியின்றி நேரில் வந்து, “எனது திருமணம் வெறும் 18 மாதங்கள் மட்டுமே நீடித்தது. ஆனால், என் கணவர் மிகப்பெரிய பணக்காரர். எனவே எனக்கு மாதம் ₹1 கோடி ஜீவனாம்சமாக வேண்டும். மேலும், மும்பையில் வீடு, ₹12 கோடி நிதியுதவி மற்றும் BMW கார் தேவை” என்று கூறினார். அதையடுத்து நீதிபதி கவாய், “நீங்கள் MBA முடித்திருக்கிறீர்கள், IT துறையில் பணியாற்றியிருக்கிறீர்கள், ஏன் வேலையை தொடரவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “முக்கியமான ஒரு கட்டுமான நிறுவனமான Kalpataru-வில் உள்ள பிளாட், அதற்கான செலவுகளை எப்படி ஏற்கின்றீர்கள்? உங்கள் திருமணம் வெறும் 18 மாதங்களில் முடிந்துவிட்டது. இப்போது BMW கார் வேண்டுமா?” என சாடினார். அந்தப் பெண், “நான் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்று கூறியபோது, “உங்கள் முகத்தில் அப்படி எதுவும் தெரியவில்லையே?” என்று தலைமை நீதிபதி பதிலளித்தார்.
இந்த வழக்கில், கணவர் சார்பாக மூத்த வழக்கறிஞர் மாதவி திவான் ஆஜரானார். அவர், “இந்தப் பெண் வேலைக்குச் செல்ல முடியும். அவருக்கு உயர்கல்வி உள்ளது. இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் கோர முடியாது. மாமனாரின் சொத்துகளையும் கோருவது முறையல்ல” என்று வலியுறுத்தினார். இதையடுத்து, நீதிபதிகள், “மாமனாரின் சொத்தை கோர முடியாது என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குத் தேவையானதை நாங்கள் சட்டப்படி தீர்க்க விரும்புகிறோம். ஆனால், வேலை செய்யவேண்டிய பொறுப்பு உங்களுக்கும் உள்ளது” என்று கூறினர்.
பின்னர், “நீங்கள் அந்த வீட்டில் அமைதியாக வாழ விரும்பினாலோ அல்லது ₹4 கோடி பணம் பெற்று புதிய வாழ்க்கையைத் தொடங்கினாலோ நல்லது. உங்களிடம் FIR உள்ளது என்றால் அதை ரத்து செய்ய வழியும் உள்ளதுதான். ஆனால், நீங்கள் உயர்கல்வி கற்றவராக இருந்து, எதுவும் செய்யாமல் எல்லாவற்றையும் எதிர்பார்ப்பது நீதிமன்றத்தால் ஏற்க முடியாது” என நீதிபதி கவாய் கூறினார்.
இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில், “நீங்கள் உங்களுக்காக நின்று, வேலை செய்து வாழ முடியும். உங்கள் கல்வி, திறமை அனைத்தும் உங்களுக்கே உதவியாக இருக்கிறது” என நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்த வழக்கு தற்போது சமூக வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. சட்டத்தின் எல்லைகள், பெண்களின் உரிமைகள், மற்றும் நியாயமான விவாகரத்து ஜீவனாம்சம் குறித்து பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
