பீஹார் மாநிலம் பிர்னோவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், தற்போது மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  இன்வா தியாரா கிராமத்தைச் சேர்ந்த மணமகள், திருமணமான அன்றைய இரவுக்கு மறுநாள் காலை தனது மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழியில், காரிலிருந்து இறங்கி தனது பழைய காதலனுடன் பைக்கில் தப்பிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 3ஆம் தேதி இரவு, புத்குடா கோதிரா பகுதியைச் சேர்ந்த பிரிஜேஷ் குமார் என்பவருக்கும், இன்வா தியாராவைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. முற்றிலும் வழக்கமான திருமண சடங்குகள், உறவினர் முன்னிலையில், மகிழ்ச்சியுடன் நடந்து முடிந்தது. காலையில் மணமகள் காரில் மாமியார் வீட்டிற்குச் செல்லும்போது, வழியில் ஒரு நபர் வந்து “மணமகளின் தாயார் உடல்நிலை மோசமாக இருக்கிறது” எனக் கூறி, அவளைக் காண அழைத்துச் செல்ல வேண்டுமென கேட்டுள்ளார். இதனை நம்பிய மணமகனும், அவரை அனுமதித்துவிட்டார்.

மணமகளை பைக்கில் அழைத்துச் சென்றவர், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சவுகான் என்பவராகும். இவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதும், பின்னர் தெரியவந்துள்ளது. மணமகளின் தந்தை சுதாமா ராம், இச்சம்பவம் தொடர்பாக ஜிதேந்திர சவுகான் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மணமகள் அணிந்திருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் அவருடன் எடுத்துச் சென்றதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், இன்வா தியாரா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இது பற்றி இன்ஸ்பெக்டர் பாலேந்திர யாதவ் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட நபரை விரைவில் கைது செய்வோம்” என்று தெரிவித்தார். இந்த சம்பவம் தற்போது பிர்னோ மாவட்டம் மட்டுமன்றி, பீஹார் முழுவதும் பரபரப்பையும், சமூகவலைத்தளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.