திமுக பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியை கடுமையாக விமர்சித்துள்ளார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது சென்றிருக்கும் நிலைமை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பாவமாகிவிட்டது. சட்டமன்றத்தில் பேச வேண்டியவர், மக்களிடம் பேச வேண்டியவர் — இன்று ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ மூலம் அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்,” என்று அமைச்சர் தொடக்கத்தில் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “ஒரு அல்வா பாக்கெட்டை வைத்துக்கொண்டு ‘உருட்டுக்கடை அல்வா’ என்று பேட்டி கொடுக்கிறார். ஆனால் உண்மையில் அவர்தான் ‘திருட்டுக்கடை பழனிசாமி’. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக எப்படித் அவரது கையில் வந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். சசிகலாவிடமிருந்து கட்சியை லீசுக்கு எடுத்து நடத்தி, பின்னர் பாஜகவுடன் சேர்ந்து அவரை சிறைக்கு அனுப்பி கட்சியை கைப்பற்றினார்.”

“பின்னர் டிடிவி தினகரனையும், ஓ. பன்னீர்செல்வமையும் ஏமாற்றி அதிமுகவை முழுமையாக கைப்பற்றினார். தற்போது அந்தக் கட்சியில் இருவர் மட்டுமே இருந்தனர் — வேலுமணி, தங்கமணி. டெல்லி பயணத்திற்குப் பிறகு அவர்களையும் விலக்கி வைத்து, இப்போது தனது மகன் மிதுன் பழனிசாமியுடன் மட்டுமே அரசியலில் இருப்பது தான் அவரின் நிலை,” என அவர் சாடினார்.

“திமுக அரசை ‘உருட்டுக்கடை’ என்று விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி, உண்மையில் மக்களுக்கு நன்மை செய்த திட்டங்களை மறைக்கிறார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் — இவை அனைத்தும் மக்கள் மத்தியில் சிறப்பாக நடைமுறையில் உள்ளன. இதையெல்லாம் ஒதுக்கி வைத்து, மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ள நீட், கல்விக் கடன் ரத்து போன்ற விஷயங்களைப் பற்றி அரசை குறை கூறுவது சரியல்ல.”

“திமுக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மக்கள் நல அரசாக இயங்கும் திமுக அரசை கிண்டல் செய்வது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் தாழ்வு நிலையை வெளிப்படுத்துகிறது.”

மேலும் “அதிமுக என்ற கட்சியை திருட்டுத்தனமாக கைப்பற்றி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, திமுகவை எள்ளி நகையாடும் அரசியலை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனி இத்தகைய செயல்களில் ஈடுபடக் கூடாது,” என்றார் அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்.