தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தெரு நாய்கள் தொல்லை மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதம் நடைபெற்ற போது, நடிகை திரிஷாவின் பெயரைத் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன் மீண்டும் குறிப்பிட்டுப் பேசியது பேரவையில் பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தெரு நாய்கள் பாதுகாப்பு மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் குறித்துப் பேசும்போது, திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன் நடிகை திரிஷாவின் பெயரைச் சுட்டிக்காட்டிப் பேசினார். இதைக் கேட்டதும் உடனடியாகக் குறுக்கிட்ட சபாநாயகர் அன்பழகன் அவர்கள், “சட்டப்பேரவையில் நடிகை திரிஷாவின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது!” என்று கண்டிப்புடன் தெரிவித்ததுடன், திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன் பேசிய அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து உடனடியாக நீக்கவும் அதிரடி உத்தரவிட்டார்.
சபாநாயகரின் இந்த உத்தரவுக்கு மத்தியிலும், சட்டமன்றத்தில் நடிகை திரிஷாவின் பெயரை தேவையில்லாமல் இழுத்துப் பேசிய திமுக எம்.எல்.ஏ-வுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களான சாய் சரவணகுமார் மற்றும் ராமு ஆகியோர் உடனடியாகத் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கடுமையான எதிர்ப்பைப் பதிவிட்டனர்.
சட்டப்பேரவையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இதுபோன்ற தேவையற்ற தனிநபர் பெயர்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தவெக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். சபாநாயகரின் தலையீடு மற்றும் தவெக எம்.எல்.ஏ-க்களின் ஆவேச எதிர்ப்பைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
