தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தவெக அரசின் திட்டங்கள் குறித்து திமுக மற்றும் தவெக அமைச்சர்கள் இடையே சுவாரசியமான அட்லீ பாணி விவாதம் ஒன்று நடந்துள்ளது. கூட்டத்தொடரில் பேசிய திமுகவை சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “இயக்குநர் அட்லீ எப்படி ஏற்கனவே ஹிட்டான பழைய படங்களில் உள்ள சிறந்த காட்சிகளை மட்டும் எடுத்து ஒரு புதிய படத்தை உருவாக்குவாரோ, அதேபோல் திமுக அரசு கொண்டு வந்த பழைய திட்டங்களைத்தான் தவெக அரசு தங்களது புதிய திட்டங்கள் போலச் சொல்லி வருகிறது” என்று கிண்டலாகக் குற்றம் சாட்டினார்.

இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த தவெக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “முழுநேர அரசியல்வாதியான சிவசங்கருக்கு இயக்குநர் அட்லீயைப் பற்றி இவ்வளவு தெரிந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது; தற்போதைய ஆட்சிக்கும், இந்தத் தொடருக்கும் அட்லீக்கும் என்ன சம்பந்தம்? சட்டப்பேரவையில் பேசுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே தேவையில்லாத விஷயங்களைப் பேச வேண்டாம்; இப்போது காலமும் காட்சியும் மாறிவிட்டன” என்று அதிரடியாகப் பதிலளித்தார். முதலமைச்சர் விஜய்யின் தம்பியாகவும், நெருங்கிய நண்பராகவும் கருதப்படும் இயக்குநர் அட்லீயின் பெயர் இப்படிச் சட்டமன்றத்தில் இழுக்கப்பட்டிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் பயங்கரமாக டிரெண்டாகி வருகிறது.