2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸிற்கு, இந்த முறை கூடுதலாக 3 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் எழுந்த சூழலில், இந்தத் தொகுதிப் பங்கீடு கூட்டணியின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் பழைய தொகுதிகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது. கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் விரும்பினாலும், திமுக தனது வாக்கு வங்கியை வலுப்படுத்த சில தொகுதிகளை மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறிப்பாக, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகளைக் கண்டறிந்து ஒதுக்கீடு செய்யும் பணிகளில் இரு கட்சிகளின் குழுக்களும் தற்போது ஈடுபட்டுள்ளன. தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் முடிந்த நிலையில், எந்தெந்தத் தொகுதிகள் காங்கிரஸிற்கு ஒதுக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.