தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் தனது தேர்தல் பிரசாரப் பயணத்தைத் தீவிரப்படுத்தி வருகிறார். திருச்சியில் இருந்து தனது முதல் கட்டத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய அவர் அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கரூர், ஈரோடு, சேலம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
விஜய் பிரசாரம் மேற்கொண்ட இடங்கள் அனைத்திலும் கட்டுக்கடங்காத அளவுக்குப் பொதுமக்கள் கூட்டம் திரண்டதுடன் வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய தென் மாவட்டங்களில் தனது அடுத்தகட்ட பிரசாரத்தைத் தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிரசாரக் கூட்டங்கள் நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் கட்சியின் பொதுச் செயலாளர் என் ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். கட்சியின் வளர்ச்சிக்கும் தேர்தல் வெற்றிக்கும் தென் மாவட்ட மக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது என்பதால் அரசியல் கட்சிகள் எப்போதும் இப்பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தென் மாவட்டங்களில் இருந்து தொடங்கும் அரசியல் மாற்றங்கள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் விஜய் தனது சுற்றுப்பயணத்தை வடிவமைத்துள்ளார். இதன்படி திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அவர் சூறாவளிப் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் மூலம் தென் மாவட்ட மக்களின் ஆதரவை முழுமையாகப் பெறுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.
