அமெரிக்க அதிபர் டிரம்பின் சதிக்கு பிரதமர் மோடி பலியாகிவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு எதிரானது. அதிபர் டிரம்பின் சதித் திட்டத்திற்குப் பிரதமர் மோடி பலியாகிவிட்டார்.
இந்திய நாட்டின் நலனை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதே அவர் அதிக அக்கறை காட்டுகிறார். இந்திய மக்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர். எனவே, பிரதமர் மோடி இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பதவி விலகக் கோரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது.
தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் ஏற்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்: “கூட்டணிக்கு பா.ம.க. வருவது குறித்த கேள்வி யூகமானது. எங்களுக்கு எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. பா.ம.க. முன்பு எடுத்த ‘சோசியல் என்ஜினியரிங்’ நிலைப்பாட்டின் போதே வி.சி.க. தனது வெளிப்படையான முடிவை அறிவித்துவிட்டது. அந்த முடிவில் இப்போதும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இது தொடர்பாக மேற்கொண்டு கருத்து கூற விரும்பவில்லை.” “வருகிற தேர்தலில் வி.சி.க.-வுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுமா என்பது பேச்சுவார்த்தையின் போதே தெரியவரும். அதேபோல், புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்தும் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
