தமிழக அரசியலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. இணைவது குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையின் கருத்து மற்றும் அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) தெரிவித்துள்ள கண்டனம் ஆகியவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் இல்லை, நண்பர்களும் இல்லை” எனக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள்.
இருவரும் ஒருவருக்கொருவர் கட்சி கொடிகளை ஏற்றி வைத்து பரஸ்பர ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசினால் கருத்து வேறுபாடுகள் மறைந்துவிடும். கூட்டணி குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுப்பார், அதுவே இறுதியானது. இதன் மூலம், பா.ம.க மற்றும் வி.சி.க ஆகிய இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம்பெறுவதில் பெரிய சிக்கல் இருக்காது என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகையின் இந்த கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உடனடியாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.-வுமான எஸ்.எஸ். பாலாஜி தனது வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “சாதியவாத, மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். வி.சி.க. தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை.” எனச் சாடியுள்ளார்.
பா.ம.க. கூட்டணிக்கு வந்தால் தாங்கள் வெளியேறுவோம் என்ற திருமாவளவனின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் கூறியதாவது: “இதுவரை கூட்டணி தொடர்பாக ராமதாஸ் தரப்போ அல்லது முதலமைச்சரோ பேசிக்கொள்ளவில்லை.
செல்வப்பெருந்தகை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. கடந்த காலங்களில் கலைஞர் தலைமையில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேர்தலைச் சந்தித்தது போல், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை முதலமைச்சர் மறுக்கப்போவதில்லை என்றார்.
மேலும் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையக்கூடும் என்ற பேச்சு நீண்ட நாட்களாகவே இருந்து வரும் நிலையில், வி.சி.க-வின் கடும் எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் தலைவரின் சமரச முயற்சி ஆகியவை வரும் தேர்தல் களத்தில் முக்கிய திருப்பங்களாகப் பார்க்கப்படுகின்றன.
