வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) இரட்டை இலக்க தொகுதிகளைப் பெற முயற்சி மேற்கொள்வோம் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒவ்வொரு தேர்தலிலும் இரட்டை இலக்க தொகுதிகளைப் பெற வேண்டும் என்பது எங்களது தொடர் முயற்சியாகும். கடந்த 2001-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் 8 தொகுதிகளும், புதுச்சேரியில் 2 தொகுதிகளும் என மொத்தம் 10 தொகுதிகளை ஒதுக்கினார். இதுவும் இரட்டை இலக்கு என்ற அடிப்படையிலேயே எங்களால் பார்க்கப்பட்டது.

அதேபோல், 2011 தேர்தலில் முதலில் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்காக 2 தொகுதிகளை திமுக திரும்பப் பெற்றுக்கொண்டதால், 10 தொகுதிகளில் போட்டியிட்டோம். ஆனால், 2021 தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு 6 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய சூழல் உருவானது.

கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை மற்றும் அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்பவே தொகுதிப் பங்கீட்டை திமுக முடிவு செய்கிறது. கடந்த முறை 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட போதும், கூட்டணியின் நலன் கருதி அதற்கு உடன்பட்டோம்.

இந்த முறையும் இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்போம். இது வழக்கமான ஒன்றுதான், இதில் புதிய முயற்சி எதுவும் இல்லை. அனைத்துச் சூழல்களையும் கருத்தில் கொண்டு, மற்ற கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் சுமூகமாகப் பேசி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வோம்.

மேலும் தொகுதிப் பங்கீடு விவகாரத்தை ஒருபோதும் நாங்கள் நிபந்தனையாக முன்னிறுத்தியது இல்லை. இந்த முறையும் எங்களது விருப்பத்தை முன்வைப்போம், இறுதியாகச் சூழலுக்கு ஏற்ப நல்ல முடிவை எடுப்போம் என்றார்.