எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வரலாறு தெரியவில்லை என்றும், அவர் பா.ஜ.க-வின் காலில் விழுந்து தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைப்பதாகவும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திமுக ஆட்சியை ஹிட்லர், முசோலினி, நீரோ ஆகியோரின் ஆட்சியுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது அரசியல் அவலம். உலக சர்வாதிகாரிகளின் டி.என்.ஏ-வாக இருப்பவர் அவர்தான். வரலாறு தெரிந்தால் பேசுங்கள் பழனிசாமி அவர்களே! இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஹிட்லரை வீழ்த்தியது ஸ்டாலினின் செம்படைதான். அதேபோல், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் படை மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தையும் நீங்கள் பறிகொடுத்துவிட்டு நிற்கப் போகிறீர்கள்.”
தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என ஊடகங்களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளைப் பார்த்து பழனிசாமி விரக்தியடைந்துள்ளார். அந்த விரக்தியின் உச்சத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் அறிக்கை என்ற பெயரில் எதையாவது கிறுக்கித் தள்ளுகிறார். டெல்லி எஜமானர்களுக்கு அடிமையாக வாழ்வதையே பெருமையாகக் கருதும் ஒரு ‘வாழ்நாள் அடிமை’, சர்வாதிகாரத்தைப் பற்றிப் பாடம் எடுக்கத் தேவையில்லை.
தமிழகத்தில் போதைப்பொருட்களைத் தடுக்கத் திராவிட மாடல் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், போதைப்பொருள் மாஃபியாக்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் அதிமுக நிர்வாகிகள் தான். நடிகர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த நபருக்கு ஐடி விங் பொறுப்பு கொடுத்த உத்தமர்தான் பழனிசாமி.
பொள்ளாச்சி சம்பவத்தை வேடிக்கை பார்த்த பழனிசாமிக்கு, இன்று பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேச எந்தத் தகுதியும் இல்லை. அவரது ஆட்சியில் பெண்கள் எப்படிப்பட்ட அச்சத்தில் வாழ்ந்தார்கள் என்பதற்கு பொள்ளாச்சி விவகாரமே சாட்சி.
மேலும் “எம்.ஜி.ஆர் பாடலை மேற்கோள் காட்டும் பழனிசாமிக்கு, ‘அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?’ என்ற பாடல் ஏன் நினைவுக்கு வரவில்லை? தமிழகத்தில் பாஜக-வின் அடிமை ஆட்சிக்கு இடமில்லை. பழனிசாமியின் அரசியல் அத்தியாயத்திற்கு 2026 தேர்தலோடு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்” என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
