சென்னை: “கடந்த திமுக ஆட்சியில் மத்திய அரசு நிதி தரவில்லை எனப் பொய் சொல்லி வந்தார்கள். ஆனால், தற்போது உண்மை முகம் அம்பலமாகியுள்ளது” என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ் (X) தளத்தில் அதிரடியாகப் பதிவிட்டுள்ளார்.

​அவரது பதிவில், கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசைக்குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துத் தமிழகத்தின் நலனை திமுக காற்றில் பறக்கவிட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இன்று உண்மை நிலையைத் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

​தமிழகத்தில் வரவிருக்கும் பருவமழைக் காலச் சீரமைப்பு பணிகளுக்காக, மத்திய அரசு பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.1000 கோடியை விடுவித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனைச் சுட்டிக்காட்டிய வானதி சீனிவாசன், மத்திய பாஜக அரசு மீது வெறுப்பு அரசியலை விதைத்த திமுகவின் முகத்திரையை மக்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும், கேட்டபோதெல்லாம் நிதி வழங்கும் மத்திய அரசுக்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார். இந்த அரசியல் விவாதம் தற்போது நெட்டிசன்களிடையே வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.