அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கூட்டணியை டெல்லியில் பாஜகவும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியும்தான் முடிவு செய்வார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், அதிமுக மற்றும் பாஜகவின் இந்தக் கூட்டணியைப் பார்த்து ஆளும் திமுக நடுங்கிப் போயிருப்பதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் நேரத்தில் வரும் விமர்சனங்கள் மற்றும் பாட்டுகளுக்கு அரசியல் ரீதியாகக் காரணங்கள் சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகள், மக்கள் சேவை செய்யும் கட்சிகள், மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் மட்டுமே அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் உறுதி செய்தார்.
நிச்சயமாக இந்தக் கூட்டணி நிறைவேறும் என்றும், தைப் பிறந்தால் அதற்கான வழி பிறக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான் என்று மீண்டும் வலியுறுத்திய அவர், “ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும்” என்று ஆவேசமாக சவால் விடுத்தார்.
