விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வானூர் அருகே திருச்சிற்றம்பலம் நான்கு மூலை சந்திப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டார்.
திமுக அரசு வழங்கிய 524 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், “75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்” என கூறுவது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது என்றும் அவர் கிண்டலடித்தார். மேலும், நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து போன்ற முக்கியமான வாக்குறுதிகளைத் திமுக அரசு மறந்து விட்டதாகவும் குறிப்பிட்டார். விவசாயிகளை பாதுகாக்கும் கடமை அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது என்றும், தற்போது விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், “மகளிர் உரிமைத்தொகை” குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசு 25 மாதங்களுக்கு பிறகு அதிமுக அழுத்தத்தால் உரிமைத்தொகையை வழங்கியது. ஆனால் அது தேர்தல் வரை மட்டுமே நீடிக்கும். அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் ₹1,500 வழங்கியிருப்போம். பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை வழங்கப்படும்” என வலியுறுத்தினார். இது மூலமாக, எதிர்வரும் தேர்தலுக்கான அதிமுகவின் நெடுங்கால நலத்திட்டத்தையும் அவர் மக்கள் முன்னிலையில் விளக்கியுள்ளார். மேலும் கடந்த தேர்தலிலும் 1500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக நாங்கள் அறிவித்திருந்த போதிலும் திமுக அரசு தரும் ஆயிரம் ரூபாய் தான் மக்களுக்கு பெரிதாக போய்விட்டது என்று சற்று வருத்தப்பட்டு கூறினார்.
