உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் இளைஞர்களின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தற்போது அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது. அதாவது நேற்று உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் அதனை முன்னிட்டு தற்கொலை குறித்த எண்ணத்தை மாற்றுவது தொடர்பான கருத்து விவாதம் நாட்டில் நடைபெற்றது. இதில் 15 முதல் 19 வயதுடைய இளைஞர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வது தெரியவந்துள்ளது. அதாவது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் படி தற்கொலை செய்து கொண்டு உயிரிழப்பவர்களில் 40% பேர் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது.

உலக சராசரி அளவை விட இந்தியாவில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவு அதிகமாக இருக்கிறது. எய்ம்ஸ் மனோ தத்துவ பேராசிரியர் நந்தகுமார் இந்தியாவில் தினசரி 160 பேர் தற்கொலை செய்து கொண்டு இறப்பதாக கூறியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.71 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாக NCRB அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் 15 வயது முதல் 39 வயது வரை இருப்பவர்களின் மரணத்திற்கு தற்கொலை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ள நிலையில் தற்போது இது ஒரு பொது பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.