உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், மதுபான உரிமம் பெறுவதற்காக வீட்டிலிருந்த 50 லட்சம் ரூபாயைத் திருடிய விவகாரத்தில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கொடூரமான கொலைச் சம்பவத்தில் முடிந்துள்ளது.
லக்னோவின் ஆஷியானா பகுதியில் வசித்து வந்த மதுபான தொழிலதிபர் மானவேந்திர சிங், கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி இரவு தனது வீட்டில் இருந்த 50 லட்சம் ரூபாய் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தனது மகன் அக்சத் பிரதாப் சிங்கிடம் (21) கேட்டபோது, மதுபான ஒப்பந்தத்திற்காக அந்தப் பணத்தை எடுத்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மானவேந்திர சிங், மகனை அறைந்ததோடு துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்சத், அதிகாலை 4 மணியளவில் தந்தை உறங்கிக் கொண்டிருந்தபோது, அவரது உரிமம் பெற்ற துப்பாக்கியாலேயே அவரைச் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூரம் இத்துடன் முடிந்துவிடவில்லை; கொலையை மறைப்பதற்காக தந்தையின் சடலத்தை இயந்திரம் மூலம் துண்டு துண்டாக வெட்டி சிதைத்துள்ளார். தலை மற்றும் கை, கால்களைத் தனித்தனியாக வெட்டி எடுத்து, வீட்டின் அருகிலுள்ள கால்வாய் மற்றும் ஆள் அரவமற்ற பகுதிகளில் வீசியுள்ளார்.

உடற்பகுதியை மட்டும் ஒரு நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் அடைத்து வைத்துள்ளார். வீட்டின் துர்நாற்றத்தை மறைக்க ரூம் ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்திய அக்சத், தந்தை மாயமானதாகப் போலீசில் புகாரும் அளித்து நாடகமாடியுள்ளார். இந்த மொத்தச் சம்பவத்தையும் அக்சத்தின் தங்கை நேரில் பார்த்தும், கொலை மிரட்டல் காரணமாக நான்கு நாட்கள் மவுனமாக இருந்துள்ளார்.
இறுதியில் சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிய அக்சத், நீதிமன்றத்திற்கு வெளியே “தவறுதலாக நடந்துவிட்டது” எனக் கூறி கண்ணீர் மல்கத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
