டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில், சினிமா பட பாணியில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் போல வேடமிட்டு கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் பின்னணியில் அதே வீட்டில் வேலை பார்த்த பெண் ஒருவரே மூளையாகச் செயல்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ​தன் வீட்டு உரிமையாளரின் தினசரி நடவடிக்கைகள் மற்றும் வீட்டில் இருக்கும் நகைகள் குறித்த ரகசியத் தகவல்களைத் தனது கூட்டாளியிடம் பகிர்ந்துள்ளார் அந்தப் பெண்.

அதன்பின், இருவரும் சேர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் போல வேடமிட்டு வீட்டில் ‘போலி ரெய்டு’ நடத்தி நகைகளையும், விலையுயர்ந்த கடிகாரங்களையும் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்தப் பெண் மற்றும் அவரது கூட்டாளியைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், நகைகள், ஒரு போலி துப்பாக்கி, போலி ஐடி கார்டு மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி சீருடை ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.