அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வேற்றுகிரகவாசிகள் மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தொடர்பான ரகசியக் கோப்புகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த முதல் கட்ட வெளியீட்டில் சுமார் 160 கோப்புகள் இடம் பெற்றுள்ளன.

இதில் முக்கியமாக 1940-களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள், குறிப்பாக 1947-ஆம் ஆண்டின் பறக்கும் தட்டு அறிக்கைகள் மற்றும் அப்போலோ 12, 17 விண்வெளி வீரர்கள் நிலவில் கண்ட மர்மமான நிகழ்வுகள் குறித்த உரையாடல்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் “இந்த ரகசியங்களை மக்கள் நேரடியாக அறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது” என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த ஆவணங்களை ஆய்வு செய்த நிபுணர்கள், வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இதில் ஏதுமில்லை என்று கருதுகின்றனர். பல வீடியோக்களில் காணப்படும் உருவங்கள் கேமரா லென்ஸ் குறைபாடுகளாகவோ அல்லது ஒளிப்புள்ளிகளாகவோ இருக்கலாம் என ஆய்வாளர் மிக் வெஸ்ட் போன்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், தற்போதைய அரசியல் சூழலில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே டிரம்ப் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். வரும் நாட்களில் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், விண்வெளி ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.