உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஜோதி மற்றும் தொழில் அதிபர் ரிஷப் இடையிலான திருமணம் நேற்று முன் தினம் நடைபெற இருந்தது. மணமகள் குடும்பத்தினர் ஏற்கனவே தங்க நகைகள் மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக வழங்கியதாக கூறப்படுகிறது.

திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போதே, மணமகன் குடும்பம் கூடுதல் ரூ. 20 லட்சம் பணமும் சொகுசு காரும் வரதட்சணையாக கொடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினர். இது வழங்கப்படாவிட்டால் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என்றும் அவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் விரக்தியடைந்த ஜோதி, மணமகன் ரிஷப் குடும்பத்தை அவமதிக்கின்றதாகவும், கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகவும் குறிப்பிட்டு திருமணத்தை நிறுத்தியுள்ளார். மேலும் திருமணத்திற்கு சில மணிநேரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இது நடந்து, சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் மணமகளின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டி தெரிவித்து வருகின்றனர்.