தாய்லாந்தில் சுற்றுலா சென்ற இந்தியப் பயணி ஒருவர், மார்க்கெட்டில் வாங்கிய மர்மமான ‘ மிட்டாயைச் சாப்பிட்டு கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதோடு, மருத்துவமனையில் ₹1 லட்சம் வரை பணம் செலுத்த வேண்டிய மோசடிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த பயண விடியோ பதிவாளர் மோனிகா குப்தா என்பவர் இன்ஸ்டாகிராமில் இந்த அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அந்த விடியோவில், தானும் தனது நண்பரும் மிட்டாயைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில், நெஞ்சில் கனம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற வினோதமான அறிகுறிகளை உணர்ந்ததாகவும், குறிப்பாகத் தனது நண்பர் 15 நிமிடங்களில் 20 முறை வாந்தி எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். உடனடியாக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் நரம்பு வழித் திரவம் (IV drip) செலுத்தப்பட்டது.
சிகிச்சைக்காக முதலில் 17,500 பாட் (சுமார் ₹48,000) பில் கொடுக்கப்பட்ட நிலையில், சில மணி நேரம் ஆழமான உறக்கத்திற்குப் பிறகு விழித்தெழுந்தபோது, மருத்துவமனை நிர்வாகம் 36,000 பாட் (சுமார் ₹1 லட்சம்) கட்டணம் கேட்டதாக மோனிகா குப்தா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அருகில் இருந்த படுக்கைகளில் அதேபோன்ற மிட்டாய் சாப்பிட்டுப் பலரும் ஒத்த அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுவதைக் கவனித்த அவர், இது கம்மீஸ் விற்பனையாளர்கள் மற்றும் சில தாய்லாந்து மருத்துவமனைகள் இணைந்து சுற்றுலாப் பயணிகளைச் சுரண்டும் ஒரு திட்டமிட்ட மோசடியாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
“>
இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தாய்லாந்தில் தெருவோர உணவுகள் மற்றும் கூடுதல் சப்ளிமெண்டுகளை வாங்கும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
