தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான நகரம் தான் ஏரல்.. இந்த ஏரல் பகுதி தற்போது கடந்த 4 நாட்களுக்கு  முன்னாள் பெய்த கன மழை காரணமாக முழுமையாக வெள்ள நீர் சூழ்ந்து உருக்குலைந்து போய்விட்டது. அந்த ஊர் இருந்த அடையாளம் தெரியாத அளவிற்கு சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மிகப்பெரிய ஒரு பாதிப்பை சந்தித்துள்ளது. ஏரலில் தாமிரபரணி ஓடக்கூடிய அந்தப் பகுதிகளில் காட்டாறு போல தாமிரபரணி ஓடி இருக்கிறது என அந்த காட்சியை பார்க்கும்போது தெரிகிறது.

குறிப்பாக வீடுகள் முழுமையாக இடிந்து போய் இருக்கிறது. வீடுகள் இருந்த இடமே தெரியாத அளவிற்கு சில இடங்களில் பாதிப்பும் மிக அதிகமாக இருக்கிறது. வீடுகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லும் அளவிற்கு வெள்ளத்தின் வேகம் இருந்துள்ளது. சாலையிலிருந்து தடமே இல்லாமல் மக்கள் எந்த வழி செல்வது என்பது கூட தெரியாமல் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த பகுதி முழுமையாக வெள்ளை நீரில் மூழ்கி போய் இருக்கிறது.

இந்த பாதிப்பில் இருந்து அவர்கள் மீள்வதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் எல்லாம் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் கவிழ்ந்து போய் கிடைக்கிறது வீடுகள் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எந்த திசையில் நிறுத்தி வைத்திருந்தார்களோ, அது  இடம் மாறி எங்கெங்கயோ தூரம் தள்ளி போய் கிடக்கிறது. ஏரல் பகுதியில் அந்த தாமிரபரணி ஆற்றினுடைய வேகம் பயங்கரமாக இருந்துள்ளது. அந்த பாலம் பாதியாக உடைந்து நிற்கிறது.

ஏரல் மட்டுமின்றி அந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் பல்வேறு வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்து எலும்புக்கூடு போல காட்சி அளிக்கிறது. எனவே வீடுகளை இழந்த அந்த பகுதி மக்கள் கண்ணீர் மல்க அரசுதான் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக கடன் வாங்கி கடனை வாங்கி அவர்கள் வீடு கட்டி, வீடுகளில் பொருட்களை வாங்கி தங்களுடைய குடும்பங்களை நடத்தி வந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் இதிலிருந்து மீண்டு வர எங்களுக்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என கண்ணீருடன் கூறுகின்றனர். என்ன செய்வது என்று கூட தெரியாமல் திகைத்துப் போய் அனாதையாக நாங்கள் நிற்கிறோம் என்று  ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் கண்ணீர் விடுகின்றனர். முழுமையாக ஏரல் நகரமே அழிந்து போயிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

மேற்கூரை இல்லாத வீடுகளாகவும், வீடுகள் இடிந்தும், வீடுகளில் இருந்த பொருட்கள் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டுள்ளது. முதலில் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்.  பொருள் சேதம் ஏற்பட்ட நிலையில், அதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏரலின் பிரபலமான சந்திரா திரையரங்கமும் முற்றிலும் நாசமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.