மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வல்லடிகாரர் கோயிலுக்குள் ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அளிக்கப்பட்டது. இதையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாரருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள் அங்கு சென்று                    வீடியோ எடுத்ததாகவும், இதனால் மு.க அழகிரி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து தன்னை அடித்து உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து முக அழகிரி, துணை மேயர் மன்னன், திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ரகுபதி, திருஞானம் உள்ளிட்டு 21 மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று நீதிபதி முத்துலட்சுமி  முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது  முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், திமுக நிர்வாகிகள் ரகுபதி உள்ளிட்ட 17 பேர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகினர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மற்றும் ஆதரவாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 17 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கை தொடுத்திருந்த தாசில்தார் காளிமுத்து, அழகிரி தரப்பினர் தாக்கவில்லை என்றும், செருப்பு அணிந்து கோவிலுக்குள் சென்றதால் அங்கு இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் மட்டுமே நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் பிறழ்சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.