தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் விஜய் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர் யாருடைய வாக்கு வங்கியில் கை வைக்கப்போகிறார் என்பதுதான் தற்போது எழுந்துள்ள பிரதானக் கேள்வி.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை, பெண் வாக்காளர்களுக்கு என்று எப்போதும் ஒரு சக்திவாய்ந்த குரல் உண்டு. விஜய் தற்போது திமுகவின் வாக்கு வங்கியைச் சிதைப்பாரா? அல்லது பெண்களின் ஆதரவைத் தன் பக்கம் ஈர்ப்பாரா? என்பதுதான் தற்போதைய அரசியல் சூழலில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்று கூறினார்.
மேலும் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில், மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
