தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உயர்மட்ட நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தூக்கி எறியப்பட்ட என்னை விஜய் அரவணைத்தார்” மனம் நொந்து போய் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே தன்னைத் தூக்கி வீசிய பிறகு, ஒரே நொடியில் தன்னைத் தூக்கிவிட்டவர் தவெக தலைவர் விஜய் தான் என்று செங்கோட்டையன் உருக்கத்துடன் தெரிவித்தார்.
விஜய்யின் அரசியல் முதிர்ச்சியும், கள அனுபவமும் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் அவர் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக அரசியலுக்கு வந்துள்ளார் என்பதுதான் முக்கியமானது. விஜய்யின் வருகை தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் நடைபெற உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் வாக்களிப்பதற்காக, வெளிநாடுகளில் இருந்து சுமார் 3 லட்சம் தமிழர்கள் தலா ரூ.1 லட்சம் வரை செலவு செய்து தமிழகத்திற்கு வரத் தயாராக இருப்பதாகவும் செங்கோட்டையன் கூறினார்.
சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
