மேகதாது அணை விவகாரத்தில் மத்திய மோடி அரசை விமர்சித்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ்  தள பக்கத்தில் மிகக் கடுமையான பதிலடி கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“மத்திய அரசு தமிழகத்தின் எந்த உரிமைகளைப் பறித்தது?” என்ற தங்களின் நேரடிக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், காங்கிரஸ் கட்சி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாக அவர் சாடியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, கடந்த 12 ஆண்டுகளாக அரியணையின் நிழலைக் கூடத் தொட முடியாமல் தோல்வியைத் தழுவி வரும் காங்கிரசுக்கு யாரையும் விமர்சிக்கத் தகுதியில்லை என்று நயினார் நாகேந்திரன் வாதாடியுள்ளார்.

‘ஒரு ரூபாய் வரிக்கு 29 பைசா’ என்ற திமுகவின் புளித்துப் போன பொய் பிரச்சாரத்தையே இன்னும் பேசிக் கொண்டு, காங்கிரஸ் கட்சி இன்னும் “கோமா” நிலையிலேயே நீடிப்பதாக அவர் கிண்டலடித்துள்ளார்.

வேலை நாட்களை 125 ஆகவும், ஊதியத்தை 300 ரூபாய்க்கும் மேல் உயர்த்திய “VB G RAM G” திட்டத்தைத் தமிழகத்தின் புதிய தவெக அரசு வரவேற்றுச் செயல்படுத்தி வரும் நிலையில், களநிலவரம் தெரியாமல் காங்கிரஸ் அதை எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் காங்கிரஸின் கடந்த கால வரலாற்றைச் சாடிய நயினார், கச்சத்தீவைத் தாரைவார்த்து மீனவர்களை வஞ்சித்தது, எமர்ஜென்சி காலத்தில் மாநில அரசுகளை 90 முறை கவிழ்த்தது, காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமிழகத்திற்குத் துரோகம் இழைத்தது என அனைத்தும் காங்கிரஸின் வேலைதான் என்று பட்டியலிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவிரி மற்றும் மேகதாது பிரச்சினைகள் தலைதூக்குவது வழக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ், மக்களுக்கு நல்லது செய்ய நினைக்காமல், மாநில உரிமைகள் பற்றி வெளியே பேசுவது “சாத்தான் வேதம் ஓதுவது” போன்றது என்று மாணிக்கம் தாகூரை நயினார் நாகேந்திரன் கடுமையாக வறுத்தெடுத்துள்ளார்.