உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், அரசு மருத்துவமனை ஊழியர்களின் மெத்தனத்தால் அரங்கேறியுள்ள கொடூரச் சம்பவம் மருத்துவ உலகையே உலுக்கியுள்ளது.
பிரசவ வலியால் துடித்த பிரேமா தேவி என்ற பெண்ணிற்கு ஆம்புலன்சிலேயே குழந்தை பிறக்க முயன்றபோது, அங்கிருந்த செவிலியர் நிலைமையின் தீவிரத்தை உணராமல் குழந்தையின் காலைப் பிடித்து வேகமாக வெளியே இழுத்துள்ளார்.
இதில் குழந்தையின் தலை தாயின் கருப்பையிலேயே சிக்கிக்கொள்ள, உடல் மட்டும் தனியாகப் பிரிந்து செவிலியர் கைக்கு வந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஊழியர்களின் இந்த அத்துமீறிய செயலால் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தவறு செய்த மருத்துவமனை ஊழியர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தப்பிக்க முயன்றனர். அங்கு சிகிச்சை அளிக்க தாமதமானதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரேமா தேவி பஸ்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி, அறுவை சிகிச்சை மூலம் கருப்பையில் சிக்கியிருந்த குழந்தையின் தலையை வெளியே எடுத்து பெண்ணின் உயிரைக் காப்பாற்றினர்.
இந்த விபரீத சம்பவத்திற்குக் காரணமான செவிலியர் மற்றும் அலட்சியமாகச் செயல்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
