ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட ராகவ் சத்தா, இன்று அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “தவறான கட்சியில் சிக்கிக் கொண்ட சரியான நபர் என்ற மனநிலை கடந்த சில ஆண்டுகளாக எனக்குள் இருந்தது” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார். 15 ஆண்டுகளாகத் தான் ரத்தம், வியர்வை சிந்தி வளர்த்த கட்சி, இன்று தனது கொள்கைகளிலிருந்து விலகிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழலை ஒழிக்கப் பிறந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது ஊழல் கட்சியாகவும், தனிப்பட்ட ஆதாயங்களுக்காகச் செயல்படும் அமைப்பாகவும் மாறிவிட்டதாகச் சாடிய அவர், இனி அங்கே தொடர விரும்பவில்லை எனத் திட்டவட்டமாகக் கூறி வெளியேறியுள்ளார். ராகவ் சத்தாவின் இந்த விலகல் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
