தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக வெற்றிக் கழகம் அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. 234 தொகுதிகளுக்கும் தலா மூன்று வேட்பாளர்கள் அடங்கிய உத்தேசப் பட்டியலை விஜய் ஏற்கனவே தயார் செய்துள்ள நிலையில், ஈரோடு பயணத்திற்குப் பின் கட்சிப் பணிகளை அவர் மேலும் முடுக்கி விட்டுள்ளார்.

குறிப்பாக, மற்ற கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட உள்ளது.

ஜெயலலிதா பாணியில் செங்கோட்டையன் வகுத்துக் கொடுக்கும் தேர்தல் பயணத் திட்டங்களை விஜய் செயல்படுத்த உள்ளதாகவும், ஜனவரிக்குள் தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடிக்கத் தவெக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வரும் 24-ஆம் தேதி தவெக-வின் புதிய தேர்தல் சின்னம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.