தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஏற்கனவே 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சாரக் குழுவை அமைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தலுக்காக மக்களுக்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட உள்ளது. கட்சி தொடங்கிய பிறகு சந்திக்கப்போகும் முதல் தேர்தல் என்பதால், மக்களைக் கவரும் வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கையைத் தயார் செய்ய அக்கட்சியின் தலைமை மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
