2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகளை “அவசரக் குடுக்கைத்தனம்” என அமைச்சர் ரகுபதி கிண்டல் செய்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் திமுகவை அப்படியே “காப்பி” அடித்தது போன்றது என அமைச்சர் விமர்சித்தார்.
“நாங்கள் மகளிர் உரிமைத் தொகை வழங்கியபோது, அது மிட்டாய் கொடுப்பது போல என எடப்பாடி கிண்டல் செய்தார். ஆனால் இன்று அவரே ரூ. 2,000 தருவதாகக் கூறுவதே முதல்வர் ஸ்டாலினின் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை உறுதிப்படுத்துகிறது” என்றார்.
தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில், அவசர அவசரமாகப் பந்திக்கு முந்துவதைப் போல எடப்பாடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும், மக்கள் அவரது திறமையின்மையை ஏற்கனவே பார்த்துவிட்டதாகவும் சாடினார்.
