திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருப்பதி தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு ஒரு சுவாரசியமான அரசியல் நகர்வு ஏற்பட்டுள்ளது. ஈத்கா மைதானத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் திருப்பதி முன்னிலையில், அஜித்தின் தீவிர ரசிகர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
கட்சி இணைப்பின் போது தங்களது கை மற்றும் கழுத்துப் பகுதிகளில் அஜித்தின் உருவத்தைப் பச்சைக்குத்தியிருந்த அந்த ரசிகர்கள், வரும் தேர்தலில் விஜய்யின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். திரைத்துறையில் இரு பெரும் நட்சத்திரங்களாகக் கருதப்படும் இவர்களின் ரசிகர்கள் அரசியல் தளத்தில் இணைந்து செயல்படுவது பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இச்சம்பவம் குறித்த காணொளி தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
