தமிழக அரசியலில் யாராலும் நம்ப முடியாத ஒரு மாபெரும் “அதிர்ச்சி” தோல்வியாக, கோட்டையின் நாயகன் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் வீழ்ந்தது அறிவாலயத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

எத்தனையோ நலத்திட்டங்கள், நவீன வசதிகள் எனத் தொகுதியைத் தனது உள்ளங்கை போல வைத்திருந்தும், 4-வது முறையாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தத் தோல்வி ஸ்டாலினையே உறைய வைத்துள்ளது. இதற்கிடையே, இந்தத் தோல்விக்குப் பின்னால் இருக்கும் “எட்டப்பர்களை” கண்டறிய இப்போது ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அதிரடியாகப் புலன் விசாரணையில் இறங்கியுள்ளது தான் இப்போதைய ஹாட் டாபிக். முன்னெப்போதும் இல்லாத வகையில், தனக்கு நெருக்கமான மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு துர்கா ரகசியமாகத் துப்பு துலக்க ஆரம்பித்திருக்கிறார்.

அப்போது கிடைத்த தகவல்கள் அனைத்தும் துர்காவைத் தூக்கி வாரிப் போட வைத்துள்ளது. “மக்கள் கொடுத்த மனுக்கள் குப்பைக்குத் தான் போச்சு, கூட்டத்தைக் காட்ட வெளியூர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து தலைவரை நிர்வாகிகள் ஏமாற்றிவிட்டார்கள்” என அடுக்கடுக்கான புகார்கள் வாசிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, உண்மையாக உழைத்தவர்களை ஓரம் கட்டிவிட்டு, பெயருக்கு வேலை பார்த்த நிர்வாகிகள் தான் இந்தத் தோல்விக்கு முழுக் காரணம் என்பது துர்காவின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதைக் கேட்டு உச்சகட்ட கோபமடைந்த துர்கா, “என் கணவரின் தோல்விக்குக் காரணமான யாரையும் விடக்கூடாது” எனப் புகார்ப் பட்டியலை அறிவாலயத்திடம் கொடுத்துள்ளாராம். இதனால் கொளத்தூர் திமுக நிர்வாகிகள் பலரின் “விக்கெட்” எந்த நேரத்திலும் விழலாம் என்பதால், அந்தத் தொகுதியே இப்போது துர்காவின் ஆக்‌ஷனைப் பார்த்து நடுங்கிக் கிடக்கிறது.