உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பபுரி பகுதியைச் சேர்ந்த ராம் துலாரி என்ற பெண்ணுக்கும், அவரது கணவரின் சகோதரி கணவரான ராம்ஜனம் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக சட்டவிரோத உறவு இருந்து வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இரவு, ராம்ஜனம் உணவருந்துவதற்காக ராம் துலாரியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே போனில் ரகசிய உரையாடல் நடந்துள்ளது. இரவு உணவு முடிந்த பின் ராம்ஜனம் கிளம்பிச் சென்றாலும், நள்ளிரவில் மீண்டும் ராம் துலாரியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

இருவரும் தனிமையில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக கணவன் அவர்களை நேரில் பார்த்துவிட்டதால் பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து கணவனின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர்.

பின்னர், இந்த கொலையைத் தற்கொலை போலச் சித்தரிக்க சடலத்தைக் கயிற்றால் தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், தங்களுக்குப் பிடிக்காத ரவீந்திர யாதவ் என்ற நபர் மீது பழியைப் போட்டு அவரிடம் பணம் பறிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் மனைவியின் சைகையும், ராம்ஜனமின் தொடர்பும் அம்பலமானது. தற்போது கொலையாளிகள் இருவரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களைச் சிறையில் அடைத்துள்ளனர்.