மகாராஷ்டிர மாநிலம் புல்டானா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், குரு – சீடர் உறவுக்கே களங்கம் விளைவிக்கும் வகையிலான ஒரு கீழ்த்தரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
அங்குள்ள மாவட்ட ஊராட்சி பள்ளியில் பணியாற்றி வரும் மகாதேவ் ஆத்மாராம் மான்தோடே (58) என்ற ஆசிரியர், தான் வகுப்பு எடுக்கும் 3-ம் வகுப்பு சிறுமிகளிடம் தொடர்ந்து அசிங்கமாக நடந்துகொண்டுள்ளார்.
வரும் ஜூன் மாதம் ஓய்வு பெறவிருந்த இந்த ஆசிரியர், சிறுமிகளைத் தனியாக அழைத்து ஆடைகளைக் களையச் சொல்லி வற்புறுத்தியதுடன், அவர்களிடம் அநாகரீகமாகச் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார்.
இதனை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியதால், பயந்துபோன சிறுமிகள் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அந்த காமுக ஆசிரியர் மீண்டும் மூன்று சிறுமிகளிடம் அத்துமீறியுள்ளார். இதனால் பொறுமையிழந்த சிறுமிகள் அழுதுகொண்டே தங்கள் பெற்றோரிடம் உண்மையைச் சொன்னார்கள்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள், திரண்டு வந்து அந்த ஆசிரியரைப் பள்ளியிலேயே வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் ஆசிரியரை மீட்டுச் சிறையில் அடைத்தனர். கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெறும் வயதில் இத்தகைய விபரீதச் செயலில் ஈடுபட்ட ஆசிரியருக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
