டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகள் கலந்து கொண்டது. இதில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் கலந்து கொண்ட நிலையில், எந்த அலங்கார ஊர்தி  மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தது என்று கருத்துக்கணிப்பு நடத்துவதற்காக மத்திய அரசு ஒரு இணையதள முகவரியை வெளியிட்டு அதில் மக்களின் கருத்துக்களை பதிவிடுமாறு அறிவித்தது. இதில் தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழ் நாயுடு என்று எழுதப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமிழ்நாடு என்ற பெயர் தமிழ் நாயுடு என்று மாற்றியது கவனக்குறைவால் நடைபெற்ற எழுத்து பிழை அல்ல என்றும் மத்தியில் ஆளும் பாஜக அரசு வேண்டும் என்றே தமிழர்களையும் தமிழ்நாட்டையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பெயரை மாற்றி எழுதியதாகவும் அறிக்கை வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆளுநர் தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என்று கூறியது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் அதில் இருந்து ஆளுநர் பின் வாங்கினார்.

இதன் தொடர்ச்சியாக தான் தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பெயரை மாற்றி எழுதியுள்ளது. இந்த தவறுக்காக தமிழ்நாட்டு மக்களிடம் மத்தியில் ஆளும் பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கையில் சீமான்  கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடி சமீபத்தில் உலகின் மிக தொன்மையான மொழி தமிழ் என்றும் அப்படிப்பட்ட மொழி தன்னுடைய நாட்டில் இருப்பது மிகவும் பெருமையான விஷயம் என்று கூறியிருந்த நிலையில், தற்போது இணையதளத்தில் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றப்பட்டதால் அது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.