ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலம் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றாலும் கொங்கு மண்டலம் அதிமுகவின் வசம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இதனால் திமுக கொங்கு மண்டலத்தில் எப்படியாவது ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை களத்தில் இறக்கி விட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி களப்பணிகளை செய்வதில் திறமையானவர் என்பதால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் அவரை வைத்து திமுக ஒரு மெகா ப்ளான் போட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது அதிமுகவின் மீது அதிருப்தியில் இருப்பவர்களை பாஜக பக்கம் செல்ல விடாமல் அவர்களை திமுக பக்கம் இழுப்பது மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் மீது அதிருப்தியில் இருக்கும் முக்கிய முன்னாள் அமைச்சர் ஒருவரை திமுகவின் வசம் இழுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த முன்னாள் அமைச்சர் பொங்கல் பண்டிகைக்கு கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவிக்க வில்லையாம்.

அதன் பிறகு சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூட அந்த முன்னாள் அமைச்சர் பாதியில் எழுந்து சென்றதோடு, இரண்டாம் நாள் ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் முன்னாள் அமைச்சர் எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுகவின் தொண்டர்கள் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.

அந்த முன்னாள் அமைச்சரின் உறவினர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் அந்த திருமணம் முடிவடைந்த பிறகு மீண்டும் தேர்தல் களப்பணியில் முன்னாள் அமைச்சர் ஈடுபடுவார் என்று கூறுகிறார்கள். மேலும் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் தனியாக வேட்பாளரை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் நிலவும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திமுக கட்சியும் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மிகுந்த கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.