சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமாக விளங்கிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) நேற்று  இரவு 8.30 மணியளவில் காலமானார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி மீண்டும் திரைப்படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல படங்களில் தனித்துவமான நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் மறைவு, திரையுலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவுக்கு திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், “சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடின உழைப்புக்கிடையில் உடல்நலத்தையும் பேணிக் கொள்ள வேண்டும்” என பதிவு செய்துள்ளார்.