நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல், அரசியல் தளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்சார் வாரியம் மூலம் மத்திய அரசு தமிழர்களை அவமதிப்பதாகக் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை (ஜன. 9) உலகம் முழுவதும் வெளியாகாது எனப் படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. சினிமா மற்றும் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாகச் சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுகிறது. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் பிரசாரங்கள் ‘கலாச்சாரம்’ என்ற பெயரில் திணிக்கப்படுகின்றன.
மத்தியப் புலனாய்வு அமைப்புகளான இ.டி, சி.பி.ஐ மற்றும் வருமான வரித்துறையைத் தொடர்ந்து, தற்போது சென்சார் வாரியமும் எதிர்ப்பாளர்களை மௌனமாக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை; அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புதான் தேவை” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் ராகுல் காந்தியின் பழைய பதிவு ஒன்றைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
Nine years earlier, @RahulGandhi had warned PM Modi not to insult Tamil culture & pride by suppressing Tamil cinema👇🏽
But @narendramodi insults Tamil people again by witholding censor certificate for #Jananayagan on purpose & blocking its release https://t.co/15OpC5jUXc
— Praveen Chakravarty (@pravchak) January 8, 2026
“ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே ராகுல் காந்தி ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தார். தமிழ் சினிமாவை அடக்குவதன் மூலம் தமிழ் கலாசாரத்தையும், பெருமையையும் அவமதிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடியிடம் அவர் கூறியிருந்தார். ஆனால், தற்போது ‘ஜனநாயகன்’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சென்சார் போர்டு மூலம் பிரதமர் மோடி தடுத்துள்ளார். இதன் மூலம் தமிழர்களை மீண்டும் ஒருமுறை அவர் அவமானப்படுத்தியுள்ளார்” என்று பிரவீன் சக்கரவர்த்தி சாடியுள்ளார்.
