திருப்புவனம் பகுதியில் காவல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு, மரணமடைந்த திருப்புவனம் அஜித்குமார் சம்பவம் தொடர்பான வழக்கை  சிபிஐ கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஜூலை 12ம் தேதி இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை துவங்கினர்.

அஜித் குமார் பலத்த வன்முறை அடையாளங்களுடன் உயிரிழந்த நிலையில், தொடக்க விசாரணையில் அவரது மரணம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதில், விசாரணைக்குள் அஜித் குமார் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எப்ஐஆர்-ஐ போலீசாரின் தரப்பில் ரமேஷ் குமார் என்ற காவல் ஆய்வாளர் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மாலை திருப்புவனம் காவல் நிலையத்துக்கு நேரில் வந்த சிபிஐ அதிகாரிகள், எப்ஐஆர் பதிவு செய்த காவல் ஆய்வாளர் ரமேஷ் குமாரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். விசாரணை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இது சிபிஐ விசாரணையின் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.

இறப்பதற்கு  முந்தைய தினம், அஜித் குமாரை விசாரித்ததாகக் கூறப்படும் நான்கு இடங்களிலும் – மடப்புரம் கோவிலில் உள்ள மாட்டுக் கொட்டாயம், கார் பார்க்கிங் பகுதி, மாணவர் விடுதி மற்றும் புளியந்தோப்பு – சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதில் 5 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.