சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. வரும் 2028-ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியையும் முந்தி, 5.7 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அபார வளர்ச்சிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா முதலிடத்தைப் பிடித்து இந்தியாவின் பணக்கார மாநிலமாகத் திகழ்கிறது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும், உத்தரப் பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. பொருளாதாரப் பட்டியலில் மகாராஷ்டிரா 45.32 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 31.19 லட்சம் கோடி ரூபாயுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
தொழில் உற்பத்தி, சேவைத் துறை மற்றும் நிதித்துறையில் இந்த மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன. மறுபுறம், குறைந்த பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் அருணாச்சல பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.
திரிபுரா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகியவையும் இந்தப் பட்டியலில் பின்வரிசையில் உள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை உயர்த்துவதில் தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களின் தொழில்முனைவுத் திறனும், அரசின் திட்டங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது இந்தத் தரவுகள் மூலம் தெளிவாகிறது.
